சான்மீனா தொழிற்சாலையில் VRS ‘விருப்ப ஓய்வு’ அறிவிப்பு

VRS குறித்து நடைபெற்ற கேட் மீட்டிங் – கலந்து கொண்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக நிர்வாகம் அறிவிப்பு


ஒரு பக்கம், 2014ல் மூடப்பட்ட நோக்கியா ஆலையை வாங்கப் போவதாக சால்காம்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம் பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் சார்ஜர்களை சென்னையில் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக உள்ள சான்மீனா தொழிற்சாலை நிர்வாகமோ 5 வருடங்கள் முடித்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு VRS அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி நிர்வாகம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் தற்போதுள்ள 500க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களை குறைப்பதற்காகவே நிர்வாகம் இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.


சான்மீனா நிர்வாகம் 5 வருடங்கள் முடித்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு VRS திட்டம் அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் பணி புரிந்த ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ1 லட்சம் விகிதம் 10.5 லட்ச ரூபாய் வரை விருப்ப ஓய்வு இழப்பீடாக கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி பணியை விட்டு நீங்குபவர்கள் டிசம்பர் 2 முன்னர் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நவம்பர் 29 – 1 மணிக்கு முன்னர் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களுக்கு 'Early Bird Offer Incentive' ஆக ஊக்குவிப்பு தொகையும் கொடுப்பதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஊக்குவிப்பு தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமல்லாமல், இவ்வாறு கொடுக்கப்படும் திட்டம் கடைசி திட்டமாக இருக்கும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நிரந்தரத் தொழிலாளர்களை குறைத்து செலவை குறைப்பது தான் நோக்கம் என்று கூறியுள்ள நிர்வாகம் இந்த திட்டத்தை தொழிலாளர்கள் ஏற்கவில்லை என்றால் எப்படி தொழிலாளர்களை குறைக்கும் என்று குறிப்பிடவில்லை.


து எப்படி நடக்கும் என்று நிர்வாகம் வாய்மொழியில் கூறியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு தொழிலாளர்களை மிரட்டி அவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து வேலையை ராஜினாமா பண்ணவில்லை என்றால், அவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறு தவறை வைத்து அவர்களை சஸ்பென்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யப் போவதாக நிர்வாகம் கூறியுள்ளது. பின்னர் தொழிலாளர்களுக்கு வேறு வழியிருக்காது என்றும் அவர்கள் வாழ்நாள் முழுதும் சஸ்பென்ஷன் மற்றும் டிஸ்மிசலை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுவது தான் வழி என்றும் நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே இன்று காலை இது குறித்து நடைபெற்ற ஆலைவாயில் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.


பொருளாதாரம் நன்றாகதான் இருக்கிறது என்று ஒரு பக்கம் அரசு கூறி கொண்டு இருக்கிறது. நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறியுள்ளார். மாநில அரசும் தன் பங்குக்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஐபோன் சார்ஜர்களையும், நோக்கியா ஆலை விலைபோவதையும் கைகாட்டி மீண்டும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக பேசுகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலை என்று காரணம் காட்டி தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.


இந்த VRS திட்டத்தினால் சான்மீனா நிறுவனத்திற்கு வெறும் லாபம் மட்டுமல்ல பல ஆதாயங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. தொழிலாளர்களுக்கு விரோதமாக சட்டசீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் மத்திய அரசு சமீபத்தில் இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் சட்ட மசோதாவை(Industrial Relations Code Bill 2019) தாக்கல் செய்ய முயற்சித்து வருகிறது. இம்மசோதாவின் கீழ் Fixed Term Employment எனும் ஒப்பந்த தொழிலாளர் முறை சட்டபூர்வமாக்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கி ஒப்பந்த தொழிலாளர்களை சான்மீனா பணியில் வைத்துக் கொள்ளலாம். மேலும் நிரந்தரத் தொழிலாளர்களை 100க்கும் கீழே கொண்டு வந்தால் பின்னர் நிரந்தரத் தொழிலாளர்களை நிர்வாகம் எப்போது வேண்டுமென்றாலும் பணியில் இருந்து நீக்கலாம். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் VRS அறிவித்திருக்கும் வேளையில் ஏறக்குறைய 500 ஒப்பந்த தொழிலாளர்களும் நீம் பயிற்சியாளர்களும் சான்மீனாவில் தற்போது பணியில் உள்ளனர்.


                66 நாள் சான்மீனா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – 5 நாள் உண்ணாவிரதம் முடிவு


             


விருப்ப ஓய்வு கொடுத்து நிரந்தரத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினால், சான்மீனாவில் உள்ள தொழிற்சங்கம் பலவீனம் ஆகும் என்பது சான்மீனா நிர்வாகத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆதாயம். நிறுவனம் தொடங்கியது முதல் இங்கு தொழிலாளர்கள் சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எல்டியுசி ஆகிய சங்கங்களின் உறுப்பினர்களாக இங்கு போராடி வருகின்றனர். தங்களுக்கு வேண்டிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும் ஊதிய உயர்விற்காகவும் தொழிலாளர்கள் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் பாடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்களை நிர்வாகம் சஸ்பென்ட் செய்தும் டிஸ்மிஸ் செய்தும் உள்ளது. மேலும் ஏற்கனவே சங்கத்தை உடைப்பதற்காக முன்னரும் நிர்வாகம் VRS கொடுத்துள்ளது.


தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை தொழிலாளர்கள் மேல் சுமத்தி வருகின்றனர் முதலாளிகள் (சமீபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது ஹோண்டா நிர்வாகம்). ஆனால் அதே சமயம் இதை வைத்து தங்களுக்கு வேண்டியபடி பணிமுறைகளை மாற்றும் வேலைகளையும் அவர்கள் செய்து வருகின்றனர். ஆனால் இதை எதிர்க்க முடியாமல் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இன்று வலுவிழந்து உள்ளோம். இதற்கு முக்கிய காரணிகள், ஒப்பந்த தொழிலாளர்களை சக தொழிலாளர்களாக மதித்து அவர்களையும் தொழிற்சங்கத்தில் இணைக்க வேண்டிய கடைமையில் இருந்து தவறியதும், சட்டரீதியான போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் என்றால் மிகையாகாது. இது தான் தாங்கள் கொடுக்கும் கடைசி VRS என்று சான்மீனா நிர்வாகம் கூறியுள்ளது. அவ்வளவு தீர்க்கமாக அவர்களால் இதை அறிவிக்க முடிந்தது என்றால் என்ன காரணம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.