வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 3வது மாடியில் இருந்து பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு பள்ளியில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்க கல்கோவில் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற அந்த மாணவி வந்துள்ளார்.
சிறப்பு வகுப்பு, பள்ளி கட்டிடத்தின் தரைதளத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் மூன்றாவது மாடிக்குச் சென்ற மாணவி அங்கிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. மாணவி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது விபத்தா என பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவியின் பெற்றோரிடமும் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பள்ளி முன்பு மாணவியின் உறவினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டனர். உறவினர்களில் சிலர் மாணவி உயிரிழந்ததற்கான காரணம் தெரியும் வரை சடலத்தை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி அங்கு வந்த ஆம்புலன்ஸை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழியேற்படுத்தினர். இதனையடுத்து மாணவியின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. தரை தளத்தில் வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மாணவி 3வது தளத்திற்கு சென்றது ஏன் விசாரணை நடைபெற்று வருகிறது.