நாட்டில் நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்த மத்திய அரசால் கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட திட்டம் அடல் புஜால் யோஜனா. (Atal Bhujal Yojana)
கோடைகாலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். பருவமழை எனும் இயற்கையின் கொடை நம்மை கைவிட்டாலும், நிலத்தடி நீர்மட்டத்தினால் சிலவாரங்கள் சமாளிக்க முடியும். ஒரு கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிய துவங்குவதால் மக்கள் குடிக்க கூட தண்ணீர் இன்றி அல்லாடும் சூழலே நிலவுகிறது.எனவே நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்த மத்திய அரசால் அடல் புஜால் திட்டம், 2019 டிசம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. நிலத்தடி நீர் வளங்கள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க இத்திட்டம் எவ்வாறு உதவும் என்பதைப் பார்ப்போம்.
முன்னாள் பிரதமர் பெயர்:
காங்கிரஸ் கட்சியை சேராத மற்றும் பிரதமராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த, முதல் பிரதமர் என்கிற பெருமைக்குரியவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். அடிப்படை தேவையான தண்ணீர் அனைவருக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. டிசம்பர் 25 அவரது பிறந்த நாளில் அவரது பெயரில் இந்த "அடல் புஜால் யோஜனா" திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
நிலத்தடி நீர்:
நிலத்தடி நீரின் பாயும் வேகம் மண்ணில் உள்ள இடைவெளிகளின் அளவை பொறுத்தது. நிலத்தடி நீர் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இது மழை பொழிவு மற்றும் பனி உருகுவதைப் பொறுத்து, அது நிலத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள விரிசல்களிலும் பிளவுகளிலும் நீர் இறங்குகிறது. சில இடங்களில் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்போது, இயற்கையாகவே நிரப்பப்படுவதை விட நிலத்தடி நீர் வேகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மனிதனின் செயல்பாடுகளால் மாசுபடுகிறது.
உலகிலேயே இந்தியா தான்:
நிலத்தடி நீர் நம் நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அண்மையில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் நிலத்தடி நீர் கிணறுகளில் சுமார் 54% குறைந்துவிட்டன. மேலும் 2020 க்குள் 21 முக்கிய நகரங்கள் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. ஆண்டுதோறும் 245 பில்லியன் கியூபிக் மீட்டர் (பி.சி.எம்) நிலத்தடி நீர் நம் நாட்டில் உறிஞ்சப்படுகிறது.
மக்கள் தொகை & நீர்ப்பாசனம்:
நிலத்தடி நீர் சரிவுக்குக் காரணம் மக்கள் தொகை மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவையே. மக்கள் தொகை அதிகரித்து வருவதால், உணவின் தேவையும் அதிகரித்து வருகிறது, அதற்காக விவசாயிகள் அதிக உணவை பயிரிட வேண்டும், மேலும் பாசனத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது, இதன் விளைவாக நிலத்தடி நீர் வீழ்ச்சியடைகிறது.
நிலத்தடி நீர் பாதுகாப்பின் அவசியம்:
நம் நாட்டில் வரும் 2020-ம் ஆண்டில் நீர் தேவை இரு மடங்காக அதிகரிக்கும், இதன் விளைவாக நூற்றுக்கணக்கான மில்லியன்களுக்கு கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.எனவே நாட்டில் நிலவும் நிலத்தடி நீர் பிரச்சினையை தீர்க்க, குறைந்த நீர் அட்டவணைகள் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டமாக அடல் புஜால் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7 மாநிலங்கள் 78 மாவட்டங்கள்:
முதற்கட்டமாக "அடல் புஜால் யோஜனா" குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் உத்திரபிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் அடல் நிலத்தடி நீர் திட்டம் ரூ.6,000 கோடி நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிதியில் உலக வங்கியிலிருந்து ரூ.3,000 கோடி கடனாகப் பெறப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தினால் மேற்கூறிய மாநிலங்களில் 78 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8,350 கிராம பஞ்சாயத்துகள் பயன்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் நோக்கம்:
நிலத்தடி நீர் மேலாண்மையை மக்களின் பங்களிப்போடு உருவாக்குவது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.தண்ணீர் பயன்பாடு மற்றும் பயிரிடும் முறையை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் குறிக்கோள். நிலத்தடி நீர்ப் பயன்பாடு, நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றை கிராமப்புற அளவில் மக்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தவும் இத்திட்டம் வழிவகுக்கிறது.