தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி


திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்பட்டது.


சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் 5 கிலோ எடையுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட அகன்ற அகல் வடிவிலான கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்பட்டு நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


 திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி கோவில் வளாகம் முழுவதும் லிங்கம், அன்னப்பறவை, மயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் லட்சம் விளக்குகளை ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.


 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் முன்பு சொக்கப்பனை மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற 3ம் பிரகாரத்தின் தூண்களில் ஏராளமான தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.


 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைணவ கார்த்திகை தீப உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யோக நரசிம்மர் சுவாமி சன்னதி அருகே உள்ள பரிமள மண்டபத்தில் தீபங்கள் ஏற்றி மூலவர் சன்னதியில் ஆரத்தி எடுக்கப்பட்டு, கோவிலுக்கு அருகே உள்ள தெப்பத்தில் கார்த்திகை தீபம் விடப்பட்டது.