உள்ளாட்சித்துறை அமைச்சரின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் அத்துமீறி செயல்படுவதைக் கண்டித்தும் , மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும் கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ கண்டன அறிக்கை
இன்று , 04.12.2019 , புதன்கிழமை , மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ அவர்கள் , கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில்
“ கடந்த 28.11.2019 அன்று கோவை குனியமுத்தூரில் ரூ.7.41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் புதிய அலுவலகத்தை உள்ளாட்சித்துறை அமைச்சரின் சகோதரர் அன்பரசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்துள்ளார் . இந்த விழாவில் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர், உள்ளிட்ட மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
உக்கடம் வாலாங்குளக்கரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை, கமிஷனர் ஷ்ரவன் குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து , கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் அத்து மீறி , அரசுப்பணிகளில் தலையிட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கிறார் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தும், கோவை மாநகர் மக்களின் சார்பில் , பரவலாக , பலத்த கண்டனங்கள் தெரிவித்தும் , தற்பொழுது குனியமுத்தூர் தெற்கு மண்டல அலுவலகத் திறப்பு விழாவில் , தலைமை விருந்தினராக பங்கேற்று , இது போன்ற நிகழ்வுகளை மேலும் தொடர்கிறார் என்பது அரசின் உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வேதனையளிக்கிறது. கவலையளிக்கிறது .எந்த ஒரு அரசு பதவியிலும் இல்லாமல், மக்களின் பிரதிநிதியாகவும் இல்லாமல் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு கோவை மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் போல் மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வு செய்வது , அரசு விழாக்களில் தலைமை விருந்தினராக பங்கேற்பது என்பது சீரான நிர்வாகத்திற்கு துளியும் உகந்தது அல்ல என்பதை உணர்ந்து கொள்வார் என்று கருதுகிறேன்
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் உரிமைகள் பறிபோவது பற்றியோ, அரசு நிர்வாகத்தில் ஒரு தனி நபர் தலையிடுவது குறித்தோ எவ்வித கருத்தும் சொல்ல முதுகெலும்பு இல்லாமல், கோவை மாநகராட்சி நிர்வாகம் ஊழல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இதை தட்டிக்கேட்கும் தைரியம் கூட இல்லாமல், கையறுந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது தொடர்கதையாக உள்ளது.
01.12.2019 அன்று , மேற்கண்ட மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் புதிய அலுவலகத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிடோர் பங்குபெற்றனர்.
மேலும் , கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 63வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர் குளத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12.55 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.இந்த விழாவில் , மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால் மேற்கண்ட இரண்டு அரசு விழாக்களுக்கும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே, எந்த ஒரு அழைப்பிதழும் அனுப்பப்படவில்லை.
ஏற்கனவே கடந்த 20.11.2019 அன்று , கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநாகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான எனக்கு , அழைப்பு விடுக்கப்படவில்லை. எனது தொகுதியில் நடக்கும் அரசு விழாவுக்கு மக்கள் பிரதிநிதியான தன்னை எப்படி அழைக்காமல் இருக்கலாம் என்று கேள்வி கேட்க, குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்த இடத்தில் , அமைச்சரின் உத்தரவின் பேரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முன்பாகவே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி எம் எல் ஏ க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை என்ன என்றும் சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்றும் தனது கண்டனத்தில் தெரிவித்தார். ஆனாலும் இது போன்ற மக்களின் பிரதிநிதிகளை புறக்கணிக்கும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே எந்த ஒரு அரசு பதவியிலும் இல்லாமல், மக்களின் பிரதிநிதியாகவும் இல்லாமல் உள்ளாட்சித் துறை அமைச்சரின் சகோதரர் என்ற அடிப்படையில், அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து, பொறுப்புள்ள அரசு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும், அரசுப்பணிகளை ஆய்வு செய்வதையும் , அரசின் நிர்வாகத்தில் தனிநபர் தலையிடுவதையும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் குடும்பத்தினர் கபளீகரம் செய்து வருவதையும் , அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் புறக்கணிப்பதையும் கோவை மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இனியும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் “ என்று கூறினா