நாடாளுமன்றம் மீது தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை


நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை


நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த காவல்துறையினரும், நாடாளுமன்ற பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மேலும் 6 காவலர்களும், நாடாளுமன்ற பாதுகாவலர்கள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நிகழ்ந்து, இன்றுடன் 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.


இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர், வீரர்களின் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.