சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் பாதுகாப்பாக வழிபாடு நடத்துவதை உறுதி செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக பிந்து அம்மினி, ரெகனா பாத்திமா ஆகியோர் தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி ஏற்கெனவே உத்தரவிட்டிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது என்றும், இதை மேலும் மோசமாக்க விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
முந்தைய தீர்ப்பு இறுதியானது அல்ல என்ற நீதிபதிகள், ஏற்கெனவே அமைக்கப்பட்ட 7 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரும் மனுக்களை விசாரிக்கும் என்றும் குறிப்பிட்டனர். மனுதாரர்கள் பிந்து, ரெகனா ஆகியோருக்கு வழக்கு முடியும் வரை பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.