போலீசாரின் வாகன சோதனை
பொது மக்களுக்கு வேதனை. அவதிக்குள்ளாகும் மானாமதுரை சுற்றுவட்டார தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள்.
மானாமதுரையைச் சுற்றிலும் வாகனச்சோதனை என்ற பெயரில் போலீசார் தினசரி கெடுபிடி செய்வதால் கூலி தொழிலாளர்கள் பலரும் பரிதவித்து வருகின்றனர்.
மானாமதுரை நகரைச் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. விவசாயம் இல்லாததால் பலரும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஸ் வசதி இல்லாததால் டூவீலரை நம்பியே பலரும் மானாமதுரை வந்து செல்கின்றனர். கூலி வேலை பார்க்கும் இவர்களிடம் போலீசார் வாகனச் சோதனையில் ஹெல்மெட் அணியவில்லை. ஓவர் ஸ்பீடு, இன்சூரன்ஸ் இல்லை என தினசரி கெடுபிடி செய்வதாக புலம்புகின்றனர்.
அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் ஏதாவது வழக்கு போட்டு அபராதம் கட்ட கூறுகின்றனர். கேட்டால் எங்களுக்கு இவ்வளவு, டார்கெட் உள்ளது புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி குறைந்தது 500 ரூபாயாவது கட்டுங்கள் என கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரிடத்தில் முழுமையாக ஆவணங்களை காண்பித்தாலும் மறுபடியும் மற்றொரு இடத்தில் மறித்து மறுபடியும் அனைத்து ஆவணங்களையும் காமிக்கும் படி கூறுகின்றனர் இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்
மற்ற ஊர்களை காட்டிலும் மானாமதுரையைச் சுற்றி உள்ள ராஜகம்பீரம், தல்லாகுளம் முனீஸ்வரர் ஆலயம், பைபாஸ் ரோடு, அண்ணாசிலை, சிப்காட், தேவர் சிலை, இளையான்குடி ரோடு, தெ.புதுக்கோட்டை ரோடு, வழிவிடு முருகன் கோயில், பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனச் சோதனை என்ற பெயரில் அபராதம் விதித்து வருகின்றனர்.
குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கூலி வாங்கும் தொழிலாளர்கள் பலரும் அபராதம் கட்டி சிரமப்படுகின்றனர்.
மற்ற நகரங்களை காட்டிலும் மானாமதுரையை வைகை ஆறு இரண்டாக பிரிக்கிறது. மேல்கரையில் வங்கிகள், பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்டவைகள் உள்ளன. கீழ்கரையில் போலீஸ் ஸ்டேசன், சந்தை கடை, போஸ்ட் ஆபிஸ், கோர்ட், தாலுகா அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன. பணி நிமித்தமாக உள்ளுரில் பலரும் டூவீலர்களை பயன்படுத்துகின்றனர். இவர்களிடமும் போலீசார் கெடுபிடி செய்வதால் பலரும் பரிதவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில் போலீசார் வாகனச் சோதனையை முழுமையாக செய்வது கிடையாது. மானாமதுரையை சுற்றிலும் வாகனச் சோதனை நடத்தியும் நகருக்குள் கொலை முயற்சி சம்பவங்கள் மூன்றுக்கும் மேல் நடந்து விட்டன. வாகனச் சோதனையில் வாகனங்களை போலீசார் சோதனை செய்வதே கிடையாது.
ஹெல்மெட் இல்லையா, இன்சூரன்ஸ் இல்லையா, அபராதம் செலுத்து என மிரட்டுகின்றனர் என்றனர். இது குறித்து போலிசார் கூறுகையில் "நாங்கள் என்ன செய்வோம். ஒரு நாள் டார்கெட் கொடுத்து இத்தனை வழக்குகள் பதிய வேண்டும் என உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதனால் வழக்கு பதிகின்றோம்” என்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரையில் வாகனச் சோதனை என்ற பெயரில் கெடுபிடி செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.