திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு ஒரு மூட்டை அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரைப் பார்த்ததும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட, அரிசி மூட்டையை வாங்கியவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர்.தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆரணி அடுத்த சேவூரில் தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும்படைக்கு புகார்கள் சென்றன. இதற்காக வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அரிசி விநியோகம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த தீபாசம்பத், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கௌரிராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தர்மன் ஆகியோர் சார்பில் இந்த அரிசி விநியோகம் நடைபெறுவதாக திமுக உள்ளிட்ட எதிர் கட்சியினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரிசி விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்பட்ட கே.ஆர். அரிசி ஆலைக்கு போலீசாருடன் அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் வருவதை அறிந்து அரிசி ஆலை உரிமையாளரும் ஊழியர்களும் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில், அரிசி மூட்டைகளை வாங்கிய மக்கள், அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் ஆலையின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பியோடினர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.