நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம்-2019ற்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு முதல், குடியுரிமைச் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும், சட்டவிரோதமாக அத்துமீறி வந்து ஊடுருவியவர்களை வெளியேற்றவும் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு, நேற்றிரவு ஒப்புதல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்-2019, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில், நடைமுறைப் படுத்தப் போவதில்லை என மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.