பொருளாதார நெருக்கடியால் நாடு கடும் பின்னடைவை சந்திக்க உள்ளது. அ.சவுந்தர்ராஜன் பேச்சு


பொருளாதார நெருக்கடியால் நாடு கடும் பின்னடைவை சந்திக்க உள்ளது. அ.சவுந்தர்ராஜன் பேச்சு

புதுக்கோட்டை, டிச.6- தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்க உள்ளது என்றார் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர்ராஜன். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி போன்றவர்கள் 1.5 சதவிகிதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மின்நுகர்வு 14.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. அப்படியென்றால் லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது என்று அர்த்தம். புதிய வேலை வாய்புகள் உருவாக்கப்படாத நிலையில் 90 லட்சம் பேர் இருக்கின்ற வேலையையும் இழந்துள்ளனர். சிறு தொழில்கள்தான் நாட்டில் 90 சதமாக வேலை வாய்ப்புகளைத் தருகின்றனர். அதை நசுக்கி விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2.75 லட்சம் கோடி வரிச்சலுகையை வாரி வழங்குகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் கொத்துக்கொத்தாக வேலை இழப்புகள் நடைபெறுகின்றனர். கட்டுமானத் தொழில் உள்ளிட்ட முறைசாராத் தொழில்களும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அந்தந்த இடங்களில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பூ சாகுபடி கணிசமான அளவில் நடைபெறுகிறது. இதனைக் கொண்டு வாசனைத் திரவியத் தொழிற்சாலைகளை நிறுவி வேலை வேலைவாய்ப்பை உருவாக்கலாம். விவசாயிகளையும் பாதுகாக்கலாம். காவிரி, குண்டாறு திட்டத்தை நிறைவேற்றினால் அந்தப் பணியில் ஏராளமான தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம். புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் விவசாயப் பயன்கள் கிடைக்கும். ஆட்சியாளர்கள் இப்படித்தான் திட்டங்களை தீட்ட வேண்டும்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தில் அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட சரத்துக்களை அமுல்படுத்தக்கோரி தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளது. சொன்னை தொழிலாளர் இணை ஆணையர்(சமரசம்) பேச்சுவார்த்தை உருப்படியாக நடக்கவில்லை வருகின்ற 18-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடிகளைப் போக்கி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக விரைவாகத் தேர்தல் நடத்த வேண்டும். குளறுபடிகளை பத்தே நாட்களில் சரி செய்ய முடியும். ஊரகப் பகுதிகளுக்கும் மட்டும் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டால் பின்னால் நடைபெறும் நகர்புறத் தேர்தலை அது பாதிக்காதா? எனவே, ஊரகப் பகுதிகளோடு நகர்புறப் பகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் ஆளுங்கட்சியினரின் தில்லுமுல்லுவுக்கே வழி வகுக்கும்.

ஒன்றிரண்டு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்றே நமது அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. தான் கொலை செய்ததாக ஒருவன் ஒத்துக்கொண்டாலும் அவனுக்கு உடனடியாக தண்டனை வழங்கக்கூடாது. அப்படிச் சொல்வதற்கு அவனுக்கு நூறு காணரங்கள் இருக்கலாம். எதையும் முறையாக விசாரணை செய்தே தண்டனை வழங்கப்பட வேண்டும். கொடுமைகளைப் பார்த்து பொதுக்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தின் காரணமாக என்கவுண்டர் போன்ற நிகழ்வுகளை சில நேரங்களில் வரவேற்கலாம். ஆனால், அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. ரவுடிகளைப் போல என்கவுண்டர் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது தொடர்ந்தால் பல மோசமான விளைவுகளை எற்படுத்தும்.

சென்னை மாநகரத்தில் சிற்றுந்துகளின் எண்ணைக்கை குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கெல்லாம் பேருந்துகள் செல்லாத பகுதிகள் சென்னையில் நிறைய உள்ளது. எனவே, மீண்டும் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை இயக்க வேண்டும். உயர் தொழில்நுட்பம் மூலம் சொகுசுப் பேருந்துகளை இயக்கப் போவதாகக் கூறுகின்றனர். ஒரு சொகுசுப் பேருந்துக்கு ஒரு கோடி செலவு ஆகும். இந்தத் தொகையில் 4 பேருந்துகளை வாங்கிவிடலாம். மத்திய, மாநில அரசுகள் பி-4-ல் இருந்து பி-5-ஐ தவிர்த்து பி-6-க்கு தாவுகின்றனர். இது வாகன உற்பத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதில் தாக்குப்பிடிப்பது சிரமம்.

30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிரம்பியவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டுமென அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. ஏற்கனவே 3 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்த இடங்களில் தினக்கூலிகளை அமர்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். இதை சிஐடியு ஒது போதும் அனுமதிக்காது. இதை நடைமுறைப்படுத்த முயன்றால் அரசு ஊழியர்களோடு இணைந்து மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்துவோம்.

சிஐடியு அகில இந்திய மாநாடு வருகின்ற ஜனவரி 25, 26 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மேற்கண்ட கோரிக்கைகளுக்கு எல்லாவற்றையும் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவோம். இவ்வாறு அ.சவுந்தரர்ராஜன் தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது சிஐடியு மாநில செயலாளர் எம்.ஐடாஹெலன், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.