திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பலியானதால், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரது மனைவி வினித்ராவுக்கு 2வதாக வியாழக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மூச்சு திணறல் ஏற்பட்டு வினித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தவறான சிகிச்சையே அவரது உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.