உள்ளாட்சித் தேர்தல் - திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரவில் சந்தேகம் எழுப்பிய திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.


முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.


அதேசமயம் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தல் நடத்தவும், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை 3 மாதங்களில் முடித்து தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டனர்.


 இந்நிலையில் அந்த உத்தரவில் சந்தேகம் இருப்பதாக கூறி திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மீண்டும் தலையிட விரும்பவில்லை எனக் கூறி திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது.