தமிழ் மொழியின் ஆதிஎழுத்து வடிவமான தமிழி எழுத்துக்களை கற்றுக்கொண்ட மாணவர்கள், ஆயிரத்து 330 திருக்குறளை தமிழி எழுத்து வடிவில் புத்தகமாக உருவாக்கியுள்ளனர். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் சாதனை பற்றிய செய்தி தொகுப்பு
சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான, உலகின் மூத்த மொழி என போற்றப்படும், தமிழ் மொழியின் தொன்மையான ஆதிஎழுத்து வடிவம் தமிழி என்றழைக்கப்படுகிறது. இதற்கான சான்றுகள் பழங்கால ஓலைச்சுவடிகளில் மட்டுமல்லாது, சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சியிலும் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ் ஆர்வலரான புவனேஸ்வரி என்பவர், தமிழி எழுத்துக்களை, கரூர் வெண்ணை மலையில் உள்ள பரணி வித்யாலயா என்ற தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தாமகவே முன்வந்து கற்றுக்கொடுத்துள்ளார்.
மாணவர்களுடன் பள்ளி முதல்வர் ராமசுப்பிரமணியனும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டதுடன், அவர் உருவாக்கிய மாணவர் தொல்லியல் மன்றம் மூலம் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழி எழுத்தை எழுதப் படிக்க கற்றுக்கொண்டுள்ளனர்.இதில் அடுத்த கட்டமாக 1330 திருக்குறளை தமிழி எழுத்து வடிவில் புத்தகமாக உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் என 25 பேர் கொண்ட குழுவினர் 4 மாத காலத்தில் கணினி உதவியுடன் எழுத்து வடிவமாக்கி, அவற்றை புத்தகமாக உயிர் கொடுத்துள்ளனர்.
புத்தகத்தின் முதல் பிரதியை தேசிய நினைவுச் சின்னம் ஆணையத்தின் தலைவர் தருண் விஜய் பெற்றுக்கொண்டார். டெல்லியில் புத்தகத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக பள்ளி முதல்வர்
ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.முதன்முறையாக மாணவர்களால் தமிழி எழுத்தில் திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மற்ற பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று தமிழி எழுத்தை கற்றுக் கொடுக்கும் முயற்சியையும் இப்பள்ளி மேற்கொண்டு வருவது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.