கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 64 வது வட்டம், உழவர் சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளை கட்டி 35 வருடங்கள்தான் ஆகிறது. ஆனால் தற்பொழுது இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து , பாழடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வீடுகளில் மக்கள் யாரும் குடியிருக்க முடியாத, வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். அங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் ஆவார்கள். தற்பொழுது இந்த அதிமுக அரசு இப்பகுதியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூட்டுமுயற்சியில் ( Joint Venture ) புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது குறித்து, இன்று 04.12.2019, புதன்கிழமை மதியம் கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ அவர்கள் , கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ கடந்த 2016 ம் ஆண்டு, 2017 ம் ஆண்டு மற்றும் 2018 ஆகிய 3 வருடங்களிலும் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிதி நிலை கூட்டத் தொடரில் இந்த வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் , சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையிலும் உள்ளது என்றும் இந்த மக்கள் தங்குவதற்கு தமிழக அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்து அந்த மக்கள் வாழ்வதற்குண்டான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேசினேன். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர்,துணை முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று பதிலளித்தார். இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்கள், வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் , கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் , வீட்டு வசதி வாரியத் துறை செயலாளர் அவர்கள் ஆகியோருக்கு என்னுடைய மின்அஞ்சல் மூலமாகவும் , கடிதம் மூலமாகவும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நான் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்தியும், தமிழக அரசின் சம்பத்தப்பட்ட துறையின் தலைமை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இந்த மக்களுக்கு அதே பகுதியில் மாற்று இடங்களில் தற்காலிகமாக வீடுகள் ஒதுக்கி தங்குவதற்குண்டான ஏற்பாடுகளையும் , இது மட்டுமின்றி பழைய சிதிலமடைந்துள்ள வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தரமான வீடுகள் கட்டி அதே மக்களுக்கு வழங்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்றும் கூறினேன். அதற்கு என்னிடம் பதிலளித்த கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் “ இது குறித்து கடந்த வாரம் கோரிக்கை மனு பெறப்பட்டதாகவும், இந்த கோரிக்கை மனு மீது இரண்டு தரப்பிலும் விசாரித்து, கருத்து கேட்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் முடிவெடுப்பதாகவும் , உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
|
சிங்காநல்லூர் ஹவுசிங்யூனிட் குடியிருப்பு வீடுகள் - புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி - நா.கார்த்திக் எம் எல் ஏ அவர்கள் , கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வேண்டுகோள்