மாலத்தீவு அருகே காற்றழுத் தாழ்வு நிலை.. சென்னை உள்ளிட்ட இடங்களில் பரலாக மழை...


லட்சத்தீவு அருகே நிலவி வந்த வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது.மாலத்தீவு மற்றும் அதையொட்டிய லட்சத் தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.


ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. பெசன்ட்நகர், திருவான்மியூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ராயப்பேட்டை, அண்ணாநகர், வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.


லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறி உள்ளதாகவும் இதனால் சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 30.6 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 11.6 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.