சென்னை : 'அ.தி.மு.க., அரசு அடிமை அரசு அல்ல; எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்' என, ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
'தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., அரசை, பா.ஜ.,வின் அடிமை அரசு' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் சென்னையில் அ.தி.மு.க., சார்பில் நடைபெற்றது.இதில், பங்கேற்ற தமிழக முதல்வரும், அ.தி.மு.க.,வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ஸ்டாலின் செல்லும் இடத்தில் எல்லாம், அ.தி.மு.க., அரசு பா.ஜ.,வின் அடிமை அரசு என, சொல்லி வருகிறார். அ.தி.மு.க., அடிமை அரசல்ல. எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்ப்போம். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஆதரிப்போம்' என, ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் பேசினார்.