விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து வரும் சுமார் 1200-க்கும் அதிகமாக பயின்று வரும் கிராமத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு இப்பள்ளியில் உடற்கல்வி (PET) ஆசிரியர் இல்லாததும் அப்பணியிடம் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலிருப்பதினாலும் கிராமத்தை உள்ளடக்கிய இப்பள்ளி மாணவ , மாணவிகளுக்கு தனி மனித ஒழுக்கம் சார்ந்த கல்வியறிவு பெற இயலாமலும் மேலும் விளையாட்டில் நல்ல திறமை இருந்தும் வெளியில் கொண்டுவர முடியாமலும் மிகவும் மோசமான சூழ்நிலையில் அரசுப் பள்ளி உள்ளதோடு மாணவர்களின் ஒழுக்கமும் கேள்விக் குறியாக உள்ளது.
மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்களின் ஒழுக்கம் சார்ந்த அறிவு, சரியான வழிகாட்டுதல் மற்றும் விளையாட்டுப் பயிற்சி பெறுவதற்கு வழியில்லாமல், விளையாட்டில் சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் கனவும்,ஆர்வமும் மாணவர்களுக்கு இன்றளவும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குநர் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் நடுநிலைப் பள்ளிகளை பொருத்தவரை ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சில இடங்களில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரு வாரத்துக்கு 28 பாடவேளைகள் இவர்கள் பணிபுரிய வேண்டும் என்பது அரசு விதி.
உடற்கல்வி ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு உடற்கல்வி, ஒழுக்கம் தொடர்பான பாடங்கள் நடத்துவது, குழு விளையாட்டு மற்றும் தடகள போட்டித் திறன் கற்பித்தல், யோகா (நண்பகல் 12 மற்றும் கடைசி பாட வேளைகளில்), வெள்ளிக்கிழமை தோறும் கூட்டு உடற்பயிற்சி, உடற்கல்வி தொடர்பான பதிவேடு பராமரிப்பு ஆகிய பணிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் மாம்பழப்பட்டு கிராமம் போன்ற அதிகமான மாணவர்களை கொண்ட பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், இது மாதிரியான பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை. இதனால் தனிமனித, சுய ஒழுக்க நலன்களை மாணவர்களிடத்தில் கடைபிடிக்கச் செய்து அவர்களை ஒரு நல்ல மனிதர்களாக மாற்றுவதென்பது ஆசிரியர்களிடத்தில் குறிப்பாக தலைமையாசிரியர்களிடத்தில் பெரும் சவாலான விஷயமாக பார்க்கப்பட்டு மாணவர்களை நல்வழிப்படுத்தவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பல பள்ளிகளில் விளையாடுவதற்கான இடவசதியுமில்லை ஆனால்,மாம்பழப்பட்டு அரசுப் பள்ளியில் இடவசதி இருந்தும் உடற்கல்வி ஆசிரியரே இல்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. மேலும் இது போன்ற பெரிய பள்ளிகளில் உடற்கல்வி (PET) ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் தங்களது தனி மனித ஒழுக்கச் சீர்கேட்டினால் அவர்களை நல்வழிப்படுத்த இயலாமல் பள்ளி மற்றும் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகள் உருவாக காரணமாகவும் இருக்கிறது என்றும் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மட்டுமின்றி, ஒழுக்கம்,உடற்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பரிசோதிக்கும் களமாகவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுதந்திர,குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் அமைந்துள்ளன.
தமிழகத்தில் இந்த போட்டிகள், குறுவட்டம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநிலம் என்ற நிலைகளில் நடத்தப்படுகின்றன.
இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறுவட்டம் மற்றும் கல்வி மாவட்ட நிலைகளை கடந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதில்லை.
தமிழக அளவில் ஒரு சில அரசு பள்ளிகள் மட்டுமே, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியரின் தனிப்பட்ட முயற்சியால் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிவாகை சூடுகின்றன.
மேலும்,கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துப்பந்து, எறிபந்து, பூப்பந்து, இறகுப் பந்து, கபடி, கோகோ, மேஜைப் பந்து உள்ளிட்ட வழக்கமான விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி, டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், கராத்தே, வாள்சண்டை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் அரசின் சார்பில் நடத்தப்படுகின்றன.
இந்த வகையான விளையாட்டுகளில் தனியார் பள்ளிகளும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளும் மட்டுமே அதிக அளவில் சாதிக்கின்றனர்.
இந்த போட்டிகளை நடத்துவதற்கு ரூ.10 கோடி வரை அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மாம்பழப்பட்டு போன்ற முழுக்க, முழுக்க கிராமத்து மாணவர்களை உள்ளடங்கிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க முடியாமல் முடங்கி விடுகின்றனர்.
மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த கல்வியறிவு கொடுத்து சமுதாயத்தில் ஒழுக்கம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளு தீர்வு கண்டு மாணவர்களை நல்வழிப்படுத்தகூடிய இடத்தில் ஆசானாக PET திகழ்கிறார். அவ்வாறான உடற்கல்வி ஆசிரியர் மாப்பழப்பட்டு அரசுப் பள்ளியில் இல்லாததால் மாணவர்களின் பாதை தடம் மாறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே,மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நிரந்தரமாக பணிபுரிய உடற்கல்வி (PET) ஆசிரியரை நியமிக்குமாறு மாம்பழப்பட்டு கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தங்களது வேண்டுதல் கலந்த கோரிக்கையை
தமிழக அரசிடம் முன் வைத்து வருகின்றனர்.