முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்காக, மானாம்பதியைச் சேர்ந்த அ.தி.மு.க.,வினர், பேனரை அச்சடித்து, வீட்டின் சுவரில் ஒட்டியுள்ளனர். இது, விதிமீறல் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் வகையிலும் சாலைகள் மற்றும் சந்திப்புகளில், பேனர் அமைக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.நீதிமன்றம் உத்தரவை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், 'பிளக்ஸ் பேனர்கள், விளம்பர அட்டைகள் வைக்க நெறிமுறைப்படுத்தியது.'மாவட்டத்தில், அனுமதியின்றி, 'பேனர்' அச்சிடு வோர் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு, சட்டப்படி, 5,000 ரூபாய் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்' என, கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால், ஐந்து மாதங்களாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம், அரசு நிகழ்ச்சி, திருமணம், கடை திறப்பு விழா என, பல்வேறு நிகழ்ச்சிகளின்போது, பேனரை பார்க்க முடிவதில்லை.இந்நிலையில், பிப்., 24ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட, அ.தி.மு.க.,வினர், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.இதில், உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியில், நுாதன முறையை கையாண்டுள்ளனர். அதாவது, பேனர் வைக்க அச்சடித்து, அதை, வீட்டின் சுவரில் ஒட்டியுள்ளனர்.நீதிமன்ற விதியை மீறும் வகையில், போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மானாம்பதி - உத்திரமேரூர் பிரதான சாலையில், ஒரு வீட்டின் சுவரில், போஸ்டரை போல, பிளக்ஸ் பேனரை ஒட்டியுள்ளனர். இதை அமைக்க அரசிடம் அனுமதியும் வாங்கவில்லை.வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், சுவற்றில், 'பிளக்ஸ்' ஒட்டப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.