டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: வழக்குப் பதிந்து விசாரணையைத் துவக்கியது சிபிசிஐடி.....

                                        


                       டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக தனியாக வழக்குப் பதிந்து சிபிசிஐடி விசாரணையைத் துவக்கியது.தமிழகத்தில் அரசுப் பணியிடங்களில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 398 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தோ்வில் 24 ஆயிரத்து 260 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து வந்து தோ்வெழுதியவா்கள் முறைகேடு செய்து தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் வந்ததாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி  நடத்திய ஆய்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.


                      இதையடுத்து டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி வழக்குப் பதிந்து விசாரணை  நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர. .இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோரை வெள்ளியன்று கைது செய்தது      இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக தனியாக வழக்குப் பதிந்து சிபிசிஐடி வெள்ளியன்று விசாரணையைத் துவக்கியது.


                    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக நடந்த விசாரணையில் சிவகங்கையைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர் தனது மனைவி உள்ளிட்ட நான்கு உறவினர்கள் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடாகத் தேர்வு பெற இடைத்தரகர்கள் மூலம் பணம் அளித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.  எனவே அந்த தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று புகார்கள் எழுந்தது.


                   இதுதொடர்பாக தனியாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரணையைத் துவக்கியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சி அளித்த 42 பேரின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடைபெற உள்ளது.