சென்னை: பிரதமரின் உதவித்தொகையை, 38 லட்சம் விவசாயிகளுக்கு பெற்று தருவதற்கான நடவடிக்கையை, வேளாண் துறை துவங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உதவித்தொகை திட்டத்தை, மத்திய அரசு, 2019 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும். சாகுபடி காலங்களில் இந்த நிதி, மூன்று தவணையாக, தலா, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், இந்த திட்டத்தில், 36.7 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 34.4 லட்சம் பேருக்கு, 2019ல், உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, 2,431 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. நடப்பாண்டிற்கான, முதல் தவணை நிதியை விடுவிக்கும் பணியை, மத்திய அரசு துவங்கியுள்ளது.அடுத்த மாதம், இரண்டாவது வாரத்திற்குள், இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, தேசிய வங்கிக்கு, இந்த பணம் மொத்தமாக, மத்திய அரசிடம் இருந்து வந்து சேர்கிறது. அங்கிருந்து, மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. தமிழகத்தில், 2019ல் பதிவு செய்த விவசாயிகளை விட கூடுதலாக, 1.55 லட்சம் பேர், நடப்பாண்டில் பதிவு செய்துள்ளனர். அதன்படி, 38.25 லட்சம் விவசாயிகளுக்கு, முதல் தவணை நிதியை பெற்று தருவதற்கான முயற்சிகளை, வேளாண் துறை துவங்கியுள்ளது.