தற்போதைய புதுவரவு கொரோனா - புதிய வைரஸ் மக்கள் பீதி.

          உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தற்போதைய புதுவரவு. சீனாவை சிதறடித்த அந்த ஆட்கொல்லி வைரஸ், ஐக்கிய அரபு நாடுகள், ஆசிய நாடுகள், ஐரோப்பா என அனைத்து நாடுகளையுமே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோய் தாக்கம் பெற்றுள்ள நிலையில், சீனாவில் மட்டுமே ஆயிரத்து 287 பேருக்கு இந்நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நோயால் 54 பேர் இறந்துள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

          கொரோனா வைரசிற்கு மருந்து இல்லை என்பதே உலக நாடுகளின் அச்சத்திற்கு முக்கிய காரணம். சீனாவில் 2003ம் ஆண்டில் பரவிய உயிர்கொல்லி நோயான சார்ஸ் வைரஸ் போன்றே இந்நோயும் சுவாச மண்டலத்தை தாக்க கூடியது. சார்ஸ் வைரசால் உலகில் 8 ஆயிரம் பேர் பலியாகினர். அதன் தொடர்ச்சியான கொரோனா வைரசிற்கு சீன விஞ்ஞானிகள் நோய் நாடி தணிக்கும் மருந்துகளை கண்டுபிடிப்பதில் களம் இறங்கியுள்ளனர். இந்நோய் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், பன்றி காய்ச்சல் போன்ற தனி வார்டுகளில் நோயாளிகளை பராமரிக்க வேண்டியதுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நபரின் தும்மல், இருமல், கை குலுக்குதல் உள்ளிட்டவைகள் கூட நோயை பரப்பும். ஊர்வன, பறப்பன என விளாசித்தள்ளும் சீனர்கள், இந்நோய் பாம்பு கறியில் இருந்து பரவுகிறது என்ற தகவலால் தற்போது அசைவம் தவிர்த்து, சைவத்தை நாடியுள்ளனர்.சீனாவின் அண்டை நாடான இந்தியாவும் இந்நோயை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் வரும் பயணிகள் அனைவரும் முழு பரிசோதனைக்கு பின்னரே, உள்நாட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். தமிழகத்தில் இவ்வைரஸ் நோயின் தாக்கம் இல்லை என மாநில சுகாதார துறை தெரிவித்துவிட்டது. இந்நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து வருவோர் விமான நிலையங்களில் கண்காணிக்கப்படுவதோடு, அவர்களுக்கு பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் விஷயத்தில் தமிழக அரசு வரும்முன் காக்கும் நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.

           பக்கத்து மாநிலமான கேரளாவில் இந்நோய் அறிகுறிகள் சிலருக்கு தென்பட்டுள்ள சூழலில், தமிழகத்திற்கு அந்ேநாய் பரவாமல் தடுப்பது மிக அவசியம். சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் வருவோர் மீது தீவிர கண்காணிப்பு அவசியம். சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும்
பயணிகளுக்கு உரிய விழிப்புணர்வை தர வேண்டியது மாநில அரசின் கடமையாகும். பன்றி காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள் தமிழகத்தில் பரவியபோது, உயிரிழப்புக்கு பின்னரே தமிழக அரசு மருத்துவ சேவைகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்டோருக்கு தனி வார்டுகள், சிறப்பு மருந்துகளை வழங்கியது. அத்தகையதொரு நிலையை கைவிட்டு, வைரஸ் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் மாநில அரசு இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.