சென்னையில் '‛ஸ்வாப் ஷாப்' திட்டத்திற்கு அமோக வரவேற்பு!


அடையாறு: சென்னை மாநகராட்சி துவங்கிய, மறு பயன்பாடுள்ள பொருட்கள் சந்தைப்படுத்தும், 'ஸ்வாப் ஷாப்' திட்டம், அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


சென்னை மாநகராட்சியில், குப்பையை தரம் பிரித்து கையாள, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, மறு பயன்பாடு பொருட்களை, மீண்டும் பயன்படுத்தும் வகையில், மாநகராட்சி, தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், அடையாறு மண்டலத்தில், 'ஸ்வாப் ஷாப்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.இதற்காக, 12 மற்றும் 13ம் தேதி, பெசன்ட் நகர், சமூக நலக்கூடத்தில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டது.பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி, புத்தகம், சைக்கிள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை அரங்கில் வைக்கப்பட்டன. இதை, தேவைப்படும் மக்கள் வாங்கிச் சென்றனர். சிலர், வீட்டில் இருந்து கொண்டு வந்த பொருட்களை கொடுத்து, அதற்கு ஈடாக, வேறு பொருட்கள் எடுத்துச் சென்றனர்.


'ஸ்வாப் ஷாப்' திட்டத்தை நேற்று பார்வையிட்ட, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், பழைய புத்தகங்களை வாங்கினார்.இது குறித்து கமிஷனர் கூறியதாவது: பலரது வீட்டில், மீண்டும் பயன்படுத்த கூடிய பொருட்கள் உள்ளன. அதை, குப்பை தொட்டியில் வீசாமல், பயனுள்ளதாக மாற்றும் இத்திட்டம், மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. நானும், சில பயனுள்ள புத்தகங்கள் வாங்கினேன். படிப்படியாக, இதர மண்டலத்திலும், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்