மயிலாப்பூர், லஸ் அவென்யூ சாலையோர சுவர்களில், அப்பகுதியில் குடியிருப்போர், ஓவியங்களை வரைந்து அசத்தினர்.தேனாம்பேட்டை மண்டலம், 123வது வார்டுக்கு உட்பட்ட, மயிலாப்பூர், நாகேஸ்வரா பூங்கா அருகில், லஸ் அவென்யூ, 5வது தெரு உள்ளது. இதில், மாநகராட்சி குழந்தைகள் மையம், இயங்கி வருகிறது.இதன் சுற்றுச்சுவர் பகுதியில், சிலர் சிறுநீர் கழித்தும், அங்குள்ள நடைபாதையில் கடை அமைத்தும், ஆக்கிரமித்து வந்தனர். நடைபாதைகள் பெயர்ந்து, அந்தத் தெரு முழுவதும் குப்பை நிறைந்து, துர்நாற்றம் வீசியது.இது குறித்து, லஸ் அவென்யூ மேற்கு குடியிருப்போர் சங்கத்தினர், மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். மாநகராட்சி அதிகாரிகள், சமீபத்தில் கடைகளை அகற்றி, சாலையை சுத்தப்படுத்தி, பெயர்ந்திருந்த நடைபாதைகளை சீரமைத்தனர்.இதையடுத்து, சங்க நிர்வாகிகளுடன், அப்பகுதியில் குடியிருக்கும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் உட்பட, 70க்கும் மேற்பட்டோர், 'கரம் கோர்ப்போம்' அமைப்பின் உதவியுடன், சுவர்களுக்கு வண்ணம் தீட்டினர்.சமூக விழிப்புணர்வு வாசகங்களுடன், அந்த ஓவியங்கள், காண்போரை ரசிக்க வைத்தன.