டில்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பாக்., அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, அவர் இந்தியாவின் பிரதமர் என்றும், பயங்கரவாதிகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த என்சிசி., மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பேசியபோது, பாகிஸ்தானை தோற்கடிக்க இந்தியாவின் முப்படைக்கு 10 நாட்கள் போதும் என பேசியிருந்தார். இந்த செய்தியை குறிப்பிட்டு பாக்., அமைச்சர் பவத் ஹூசைன் விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், இந்திய மக்கள் மோடியை தோற்கடிக்க வேண்டும், அவர் மற்றொரு மாநிலத் தேர்தலையும் (பிப்.,8ல் டில்லி சட்டசபை தேர்தல்) இழக்க வேண்டும். காஷ்மீர் விவகாரம், குடியுரிமைச் சட்டம் மற்றும் பொருளாதாரம் தோல்வி ஆகியவற்றின் உள் மற்றும் வெளிப்புற எதிர்வினைகளால், மோடி சமநிலையை இழந்துள்ளார், என பதிவிட்டிருந்தார்.