சென்னை மைலாப்பூரில் உள்ள விருபாட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி,7 நடராஜர் சிலைகள் வீதி உலா வந்து, சந்திக்கும் உற்சவம் நடைபெற்றது.கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், வெல்லீஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய 7 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலைகளுடன், வீரபத்ரர், ஏகாம்பர ஈஸ்வரர் மற்றும் அம்பாள் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க நட்டு சுப்பராயன் தெருவை அடைந்தது.அங்கு எதிரில் நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் தேரில் பவனி வந்து நடராஜரை தரிசிக்கும் உற்சவம் நடைபெற்றது. சிவனடியார்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவ விழாவில், அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நாணயங்களால் அம்பாளுக்கும் நடராஜப் பெருமானுக்கும் கனகாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் நடராஜர்- சிவகாம சுந்தரி அம்பாள் நடன காட்சியும் நடைபெற உள்ளதால், இதனைக் காண உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.விழாவையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணித்து வருகிறார்கள்.
ஆருத்ரா தரிசனம்....