சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும்; அதை மாற்றக் கூடாது என, தமிழக அரசை மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதிகளுள் ஒன்றான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், லட்சக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவித்து, பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, உலகளவில் தமிழ்நாட்டிற்கு மதிப்பைத் தேடித்தந்த கல்விக்குழுமம் ஆகும்.
சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி என்ற பெயர்களில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பது போல், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதை மாற்றக் கூடாது.கடலூர் மாவட்டத்திற்கான புதிய மருத்துவக் கல்லூரியை, மாவட்டத் தலைநகரான கடலூரில்தான் தொடங்க வேண்டும். அதன்மூலம், கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.அதற்கு மாறாக, செட்டிநாட்டு அரசரின் பெயரையும், புகழையும் மறைக்கின்ற முயற்சியை ஏற்றுக்கொள்ள இயலாது; எந்தக் காரணத்தைக் கொண்டும், ராஜா முத்தையாவின் பெயரை நீக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்துகின்றேன். அத்தகைய முடிவினை அரசு மேற்கொண்டால், மதிமுகவின் சார்பில் சிதம்பரத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.