தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு ஆகியவற்றில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 பேர் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பான விசாரணையில்தான் இது தெரிய வந்தது.
இப்படி மோசடியாக தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்தனர்.
தலைமை செயலகம், சார் பதிவாளர் அலுவலகம், ஆர்.டி.ஒ. அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் 42 பேரும் பணியில் இருப்பதாகவும், அவர்கள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பலர் பதிவுத்துறை அலுவலகங்களில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோன்று பணியில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் ஜெயராமன், காரைக்குடி பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த வேல்முருகன் (சித்தாண்டியின் தம்பி), தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சுதா, சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஞானசம்பந்தம் ஆகியோர் பிடிபட்டனர்.
குரூப்-2ஏ தேர்வு முறைகேடு: பதிவுத்துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்டு.