கொடைக்கானலில் குவிந்த போதை கும்பல் : 250 பேர் கைதுக்கு பின் விடுதலை.

      திண்டுக்கல் : கொடைக்கானலில் தனியார் ஓட்டல் ஒன்றில் போதை விருந்தில் ஒன்று கூடிய 250 பேரை போலீசார் கைது செய்து, பின் விடுவித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த குண்டுப்பட்டியில் தனியார் ஓட்டலுக்கு அருகே உள்ள தோட்டம் ஒன்றில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மதுரையில் இருந்து கொடைக்கானல் விரைந்த சிறப்பு போலீஸ் படையினர், ஓட்டலில் சோதனையிட்ட போது அங்கு தங்கி இருந்த கும்பல் போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


                  


இவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் இணையதளம் மூலம் கொடைக்கானலில் ஒன்று கூடியதாகவும், போதை விருந்தில் கலந்து கொள்ள வந்ததாகவும் தெரிகிறது. அவர்கள் வைத்திருந்த போதைப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் அனுமதியின்றி கேளிக்கை விருந்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விசாரணைக்கு பிறகு கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட 250 இளைஞர்களையும் போலீசார் விடுவித்துள்ளனர். விருந்தை ஒருங்கிணைத்த 2 இளைஞர்கள், தோட்டத்தின் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.