பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் - நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை



பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின், 51ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில், அதிமுக சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்...


முதலமைச்சரைத் தொடர்ந்து, அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.


 


சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி, இன்று காலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர், அமைதிப் பேரணி சென்றனர். இதன் முடிவில், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், மு.க.ஸ்டாலின், மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


இதேபோன்று, பேரறிஞர் அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள இல்லத்தில், அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பென்ஜமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக, திமுக சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.