கரோனா வைரஸ் எதிரொலி: உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலை முடக்கம்

      கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக தென் கொரியாவின் உல்சானில் இயங்கி வரும் உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலைப் பணிகள் முடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள தொழில்துறை முடக்கம், குறிப்பாக சீனாவில் இதனால் ஏற்பட்ட கார்களுக்கு தயாரிக்கப்படும் மின்னணு பாகத்தின் உற்பத்தி பாதிப்பு இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.


      ஹுண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலையான இங்கு ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் பெறப்பட்டு கார் தயாரிக்கப்பட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கியா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் இணைந்து உலகின் 5ஆவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளராய் திகழ்கிறது. இதனால் 25 ஆயிரம் தொழிலாளர்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரு பகுதி சதவீத ஊதியத்துடன் கட்டாய விடுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு உற்பத்தி முடங்கினால் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தக பாதிப்பு ஏற்படும் என ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


      அதுமட்டுமின்றி தென் கொரியாவில் இயங்கி வரும் ரெனால்ட் மற்றும் ஐரோப்பியாவில் இயங்கி வரும் ஃபியெட் கார் உற்பத்தி தொழிற்சாலைப் பணிகளும் அடுத்த சில நாட்கள் நிறுத்திவைக்கப்படவுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.