யோகி பாபு தனக்கும், பார்கவி என்கிற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாக கடந்த 5ம் தேதி காலை ட்விட்டரில் அறிவித்து மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்தவர்கள் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கொண்டு இப்படி ரகசியமாக திருமணம் செய்துள்ளாரே என்று பேசத் துவங்கினார்கள். இந்நிலையில் இது குறித்து முதல்முறையாக யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார்.ஊரையே கூட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் கனவு. ஆனால் திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத குடும்ப சூழலால் திருமணத்தை இப்படி நடத்த வேண்டியதாகிவிட்டது. மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.
யோகி பாபுவின் திருமணம் ஆரணி அருகில் உள்ள குலதெய்வம் கோவிலில் வைத்து நடந்தது. அந்த திருமணத்தில் மொத்தம் 10 பேர் தான் கலந்து கொண்டனர். மணப்பெண்ணின் பெற்றோர் கூட பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. திருமணம் நடக்கும் நாள் அன்று யோகி பாபு இடத்தை மாற்றியதாகவும் பேசப்பட்டது. அப்படி ஏன் ரகசிய திருமணம் செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிய நேரத்தில் தான் யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார்.உங்களுக்கு வரும் தை மாதம் திருமணம் நடக்கும் என்று ரஜினி தன்னிடம் கூறியதாக தர்பார் இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு தெரிவித்தார். அதன்படி அவர் திருமணம் நடந்துள்ளது. ரஜினி சொன்னது போன்றே நடந்துவிட்டதால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் யோகி பாபு தன் மனைவியுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.