கிண்டியில் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: போதையில் அங்கேயே உறங்கியதால் பிடிபட்ட திருடர்கள்.

        சென்னை கிண்டியில் கோவில் ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்கள் 2 பேர் அங்கேயுள்ள உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். பின்னர் போதை காரணமாக கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு திருடலாம் என உறங்கியவர்கள் காலையில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டனர்.கிண்டி என்ஆர்சி சாலையில் எல்லையம்மன் கோயில் உள்ளது. அப்பகுதியில் பிரசித்திப்பெற்ற கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். பக்தர்கள் காணிக்கை அளிக்க கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த உண்டியலை நிரம்பிய பின்னரே திறக்கும் வழக்கும் இருந்துள்ளது.இதை பக்தர் போர்வையில் வந்த 2 பேர் நீண்ட நாட்களாக நோட்டமிட்டுள்ளனர். உண்டியலை உடைத்தால் ஏராளமான பணம் நகைக்கிடைக்கும் என திட்டம் போட்ட அவர்கள் அதற்கு நாள் குறித்துள்ளனர். நேற்றிரவு திருட முடிவெடுத்துள்ளனர்.


 


      எல்லோரும் போன பின்னர் அர்ச்சகரும் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் போதை ஏற்றிக்கொண்டு உள்ளே புகுந்த திருடர்கள் இருவரும் கோயில் உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.நீண்ட நேரமாகியும் பூட்டு உடைபடாமல் இருந்துள்ளது. போதை அதிகமாக இருந்ததாலும் கோயில் உண்டியலை உடைக்கும் முயற்சியில் சோர்வுற்றதாலும் இருவரும் சற்று ஓய்வெடுக்க , கண் உறங்கிவிட்டு உண்டியலை உடைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். பின்னர் இருவரும் போதையில் அங்கேயே உறங்கிவிட்டனர்.




    போதை அதிகமாக இருந்ததால் நிறைவேற்றவந்த வேலையை மறந்து அதிகாலைவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். காலையில் கோயிலை திறந்து பூஜை செய்ய அர்ச்சகர் வந்துள்ளார். பக்தர்களும் வந்துள்ளனர்.அப்போது இரண்டுபேர் கையில் சுத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உண்டியலைச் சுற்றி உருண்டுக்கிடப்பதைப்பார்த்து அருகில் சென்று எழுப்பியுள்ளனர்.ஆனாலும் அவர்கள் போதை தெளியாததால் எழுந்திருக்க மறுத்துவிட்டனர். உடனடியாக பொதுமக்கள் கிண்டி போலீஸுக்கு தகவல் கொடுக்க அங்கு வந்த போலீஸாரும் அவர்களை தட்டி, மிரட்டி எழுப்ப முயற்சித்தும் அவர்கள் எழுந்திருக்க மறுக்கவே அப்படியே தூக்கி ஸ்டேஷனுக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.


      போதையில் இருந்ததாலும், கண்விழிக்காததாலும் அவர்கள் யார் என்கிற விபரத்தை போலீஸாரால் விசாரிக்க முடியவில்லை. போதை தெளிந்து எழும்போது அவர்களுக்கும் உண்மை தெரியவரும். ஊரெல்லாம் சிவாராத்திரிக்கு கண் விழிக்க கோயில் உண்டியலில் கைவரிசைக்காட்ட வந்த இருவரும் போதையில் உறங்கி சிக்கியுள்ளது போலீஸாரிடையே வேடிக்கையாக பார்க்கப்படுகிறது