வேலூர் விமான நிலையத்திற்காக அப்துல்லாபுரம் சாலை ஒப்படைக்கப்பட்டதால் மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, நேற்று அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து அளவீடு செய்தனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 120 ஏக்கரில் முதற்கட்டமாக ₹31.52 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு சிறிய ரக விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக வேலூர் விமான நிலையத்தில் டெர்மினல் பில்டிங், ரன்வே, வாகன நிறுத்துமிடம், விமான நிலைய கட்டிடங்கள் என 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. ஆனால் விமான நிலையத்தின் நடுவில் செல்லும் அப்துல்லாபுரம்-தார்வழி சாலை வருவதால் அதனை விமான நிலையத்திடம் ஒப்படைத்து அதற்கு பதிலாக விமான நிலையத்தை சுற்றி மாற்றுப்பாதை அமைக்க அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அனுப்பியது.ஆனால் இந்த பணி சில காரணங்களால் தடைபட்டது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், போக்குவரத்து முதன்மை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், வேலூர் மாவட்ட வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறை, விமான நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், அப்துல்லாபுரம், ஆலங்காயம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை விமான நிலையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தும், இதற்கு பதிலாக ₹1.70 கோடியில் மாற்றுச் சாலை அமைத்து தரவும் முடிவானது.இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன், விமான நிலைய உதவி பொதுமேலாளர் கீர்த்திராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் அண்ணாமலை மற்றும் அதிகாரிகள் மாற்றுப்பாதை அமையும் இடங்களை நேற்று அளவீடு செய்தனர். பணிகளை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விமான நிலையத்தின் அருகே உள்ள குடிநீர்தொட்டி, மின்கம்பம் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதையில் 900 மீட்டர் நீளத்திற்கு 12 மீட்டர் அகலம், 7 மீட்டரில் தார்ச்சாலை அமைக்கப்படும். வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ள 2 இடங்களில் கட்டியுள்ள விமான நிலையத்தின் தடுப்பு சுவர்களை இடிக்க விமான நிலைய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சுவர் இடித்தவுடன் மண் சாலை சமன்படுத்தப்பட்டு, வாகனங்கள் செல்ல தகுதியானதா? என சில வாகனங்களை இயக்கி சோதனை செய்த பின்னர் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்' என்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....