'கொடுமைக்கார கொரோனா': கைவிரிக்கும் சீனா.

             


          பீஜிங்: 'கோவிட் -19' என, பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது, தடுப்பது குறித்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆலோசனை கூட்டம் பீஜிங்கில் நடந்தது.கூட்டத்திற்கு, சீன பிரதமர் லி கெக்கியாங் தலைமை வகித்தார். உயர் அதிகாரிகளும், சுகாதாரத்துறையினரும் பங்கேற்றார்கள்.கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது. அதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் கடினமாக உள்ளது. இது சீன அரசிற்கு இது மிகப்பெரிய நெருக்கடியையும் சோதனையையும் கொடுத்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை, சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்கிறேன்.இந்த வைரஸ் பாதிப்பு, சீனாவில் தவிர்க்க முடியாத பொருளாதார இழப்பை மட்டுமின்றி சமூகத்தில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசை விரைவில் கட்டுப்படுத்தி சீனா மீண்டெழும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.'கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து உண்மை செய்திகள் வெளிவருவதில்லை. வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. வைரஸ் எப்படி உருவானது என்பதையும் அரசு தெரிவிக்கவில்லை' என்ற மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு, இந்தக் கூட்டத்தில், சீன அதிபர் பதிலளிப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.ஆனால், மக்களின் குற்றச்சாட்டுகளுக்கும் சந்தேகங்களுக்கு அதிபரோ அதிகாரிகளோ பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.