தேனி பிப் 19,
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் சார்பில் அரசு பணியார்களுக்கான அடிப்படை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் துவக்கி வைத்து, தெரிவித்ததாவது:-தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும். அனைத்து துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தங்களது பணிகளை சிறப்பாகவும், சரிவரவும் மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு தங்களது பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் அனைத்து வகையான சந்தேகங்களுக்கு, தீர்வு காணும் அடிப்படையில், இவ்வகையான பயிற்சிகள் உறுதுணையாக அமைகிறது. இப்பயிற்சியானது வருகின்ற 31.03.2020 வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், குடும்ப சூழ்நிலைகளை தவிர்த்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள பணியாளர்கள் கவனத்துடனும், ஆர்வத்துடனும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தெளிவான முறையில் பயிற்சியாளர்களால் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்க வேண்டும்.
மேலும், இப்பயிற்சியில் வருகைப்பதிவேடு, கோப்புகள், கடிதங்கள், ஊதியப்பட்டியல்கள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 போன்ற பல்வேறு கோப்புகள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து தெளிவான முறையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே, இப்பயிற்சியினை நல்லமுறையில் கற்று தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இப்பயிற்சியில், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வர் டாக்டர் எம்.வீரப்பன், துணை ஆட்சியர் மு.ராமகிருஷ்ணன், கம்மாவர் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.தர்மலிங்கம், அரசு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு பணியாளார்களுக்கான அடிப்படை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்