வேலூர் பழைய மீன் மார்க்கெட் எதிரே கோட்டை முன்பு மைதானமாக செயல்பட்டு வந்த இடம் தொல்லியல் துறை சார்பில் 5 ஏக்கர் பரப்பளவில் பூங்காவாக மாற்றப்பட்டது .இதில் மண் கொட்டப்பட்டு செழித்து வளரக்கூடிய புற்கள் நடப்பட்டன .இவை அனைத்தும் செழிப்பாக வளர்ந்து தரையில் பச்சை நிற போர்வை போர்த்தியது போல பசுமையாக காட்சியளித்தது.தற்போது வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பூங்காவில் உள்ள புல்வெளிகளில் பல இடங்களில் பட்டுப் போய் இருந்தன. இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை மர்ம நபர்கள் புல்வெளிக்கு தீவைத்தனர். காற்றின் வேகத்தில் வேகமாக பரவிய தீ புல்வெளிகளில் பற்றி எரிந்தது.இதுபற்றி வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பூங்காவில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த அசம்பாவிதத்தால் பூங்காவில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல்வெளிகள் கருகி நாசமானது.கடந்த சில நாட்களாக வேலூரில் உள்ள மலைகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நகரின் மத்தியில் உள்ள பூங்காவிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.