அயோத்தி அருகே மசூதிக்கு இடம்: புத்துயிர் பெறும் கிராமம்.

         அயோத்தி : அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி ராம ஜென்ம பூமியில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு ஒதுக்கி உள்ளது. இதனால் இந்த இடத்தின் அருகே உள்ள கிராமம், பரபரப்பாகி உள்ளது.

         லக்னோ - கோரக்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனிப்பூர் கிராமத்தில் தான் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் அமைந்துள்ளது. அதிகமானவர்கள் கடந்து செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருந்தாலும் இந்த கிராமம் பற்றி இதுவரை யாரும் அதிகம் கேள்விப்பட்டது கிடையாது. தற்போது நிறைய பேர் இந்த கிராமம் எங்கிருக்கிறது என விசாரிக்க துவங்கி விட்டனர்.இந்த கிராமத்தில் 60 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மசூதி கட்டுவதற்காக அரசு இந்த கிராமத்தை தேர்வு செய்து நிலம் ஒதுக்கியதை சிலர் எதிர்த்தாலும், பலர் வரவேற்றுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள், ஏற்கனவே மசூதி இருக்கும் போது புதிய மசூதி கட்ட வேண்டிய தேவை என்ன என பொதுவாக கேள்வி கேட்பார்கள். ஆனால் தற்போது இங்கு புதிய மசூதி அமைவதை இளைஞர்கள் வரவேற்றுள்ளனர். இங்கு பாபர் மசூதி கட்டப்பட்டு விட்டால், அதன் பிறகு புதிய மசூதிகள் கட்டப்படாது என்பதுடன், புதிய மசூதியால் தங்களின் கிராமம் வளர்ச்சி பெறும் என இளைஞர்கள் கூறுகின்றனர்.

    அமெரிக்காவில் இருந்து திரும்பிய 34 வயது இன்ஜினியர் ஒருவர் கூறுகையில், இந்த கிராமத்தைச் சுற்றி ஏற்கனவே 2க்கும் அதிகமான மசூதிகள் உள்ளன. தொழுகையின் போது இவையே நிரம்புவது இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி அரசு வெறும் நிலத்தை ஒதுக்குவதானால் அதில் ஏன் ஒரு ஐடிஐ அல்லது கல்லூரி அல்லது மருத்துவமனை கட்டக் கூடாது? 25 கி.மீ., சுற்றளவில் எந்த ஐடிஐ.,யும் இல்லை என்றார்.இதனை ஏற்க மறுத்துள்ள மற்றொரு இளைஞர், மசூதி அமைக்க ஒதுக்கப்பட்ட நிலம் என்பதால் மசூதி தான் கட்ட வேண்டும். கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இது நேரடியாக நமது வளத்துடன் தொடர்புடையது. ஏற்கனவே மசூதி இருந்த இடத்தில் நிலம் பெற முடியவில்லை. இப்போது இங்கு மசூதி கட்டவில்லை என்றால் பாபர் மசூதியையே மறந்து விடுவோம் என்றார். இப்போது மசூதி கட்டப்படாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம் என அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.5 ஏக்கர் நிலம் என்பது வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மத்தியில் கோயில் ஒன்று உள்ளது. அதற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் மசூதி கட்டப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.