சி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியீடு

           


        கம்பெனி செக்ரட்டரிஷிப் பதவிக்காக, டிசம்பர் மாதம் நடந்த, சி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியா, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.கார்பரேட் நிறுவனங்களில், நிறுவன செயலர் பதவியான, கம்பெனி செக்ரட்டரி பதவியில் சேர, இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரிஷிப் நிறுவனம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த, 2019 டிசம்பரில் நடந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், சி.எஸ்., எக்ஸிகியூட்டிவ் பழைய பாடத் திட்டத்திற்கான தேர்வில், சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், 2019ல், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லுாரியில் பி.காம்., ஹானர்ஸ் படித்து முடித்தார். தற்போது மயிலாப்பூரில் உள்ள எஸ்.கே.மூர்த்தி அசோசியேட்ஸ் ஆடிட்டர் நிறுவனத்தில், சி.ஏ., படித்து வருகிறார். தந்தை கணேசன், தனியார் நிறுவன அதிகாரி. தாய் மீனாட்சி, இந்திய தர நிர்ணய ஆணைய அமைப்பின் அதிகாரி. சி.எஸ்., எக்ஸிகியூட்டிவ் புதிய பாடத் திட்டத்தில் கல்யாணி என்ற மாணவி முதலிடத்தையும், இரண்டு மாணவர்கள் அடுத்த இரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர்.சி.எஸ்., புரொபஷனல் பழைய பாடத்திட்டத்தில், தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை மாணவர்களே பெற்றுள்ளனர். புதிய பாடத் திட்டத்தில் முதல் மூன்று இடங்களை மாணவியர் பெற்றுள்ளனர். கூடுதல் விபரங்களை, www.icsi.edu/home என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்