தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.தேர்தல் களத்தில் தி.மு.க. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிகளின் துணையுடனேயே தேர்தலை சந்திக்க தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக பிரபல அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை கேட்டும் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை பிரசாந்த் கிஷோரே வகுத்து கொடுத்து வருகிறார்.இதற்காக பிரசாந்த் கிஷோரின் குழுவினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே சென்னை வந்து தமிழக அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்துள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக சென்றும் கள நிலவரங்களை சேகரித்து வருகிறார்கள்.தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் யார்- யாரின் செயல்பாடு நன்றாக உள்ளது? தொகுதி மக்களை தினமும் அணுகும் எம்.எல். ஏ.க்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் தயாரித்து வருகிறார்கள்.யார் மீதாவது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தி.மு.க. இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாவட்டத்தில் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.கட்சியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் உள்ள மாவட்ட செயலாளர்களை தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து அவர்களது அனுபவத்தை கட்சி பணிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருப்பது போல் 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்தால் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் ஆலோசனைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.இது எந்த அளவுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்பதை கணிக்க முடியவில்லை. அதே நேரத்தில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் நிச்சயம் கைகொடுக்கும் என்றே தி.மு.க.வினர் நம்புகிறார்கள்.இதற்கிடையே சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் தி.மு.க. இப்போதே தீவிரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கு உள்ள அதேநேரத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக களம் இறக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.இதற்காக தி.மு.க. முன்னணி நிர்வாகிகளின் கருத்துகளையும் கட்சி தலைமை கேட்டு வருகிறது. அதேநேரத்தில் கூட்டணி கட்சியினருக்கும் பிரச்சினை இன்றி தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பது பற்றியும் தி.மு.க. தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.