மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளை சேகரித்து, இயற்கை உரம் தயாரிக்க, அடையாறு மண்டலத்தில், 100 கம்பி வலை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.சென்னை மாநகராட்சியில், குப்பையை தரம் பிரித்து கையாள, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மக்கும் குப்பையில் இருந்து, உரம், எரிவாயு தயாரிக்கப்படுகிறது.மக்கா குப்பையில் இருந்து, மறுசுழற்சி பொருட்கள் தரம் பிரித்து எடுக்கப்படுகின்றன. மேலும், சில கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழிக்கப்படுகிறது. மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளை, வீட்டு குப்பையுடன் சேர்த்து அள்ளுவது வழக்கம். குப்பை கிடங்கில், தீ கொளுந்துவிட்டு எரிய, காய்ந்த இலைகளும் ஒரு காரணம்.இதனால், காய்ந்த இலைகளை தனியாக சேகரித்து உரம் தயாரிக்க, அடையாறு மண்டலத்தில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மண்டலத்தில் உள்ள, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதியை உள்ளடக்கிய, 175, 176, 181 மற்றும் 182 ஆகிய வார்டுகளில், இலைகள் சேகரிக்க, 6 லட்சம் ரூபாய் செலவில், 100 கம்பி வலை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.அதுவும், மரங்கள் அதிகம் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்டு உள்ளன. சாலையை சுத்தம் செய்யும் துப்புரவு ஊழியர்கள், காய்ந்த இலைகளை மட்டும் சேகரித்து, தொட்டியில் கொட்டுவர்.அவை, லாரியில் அள்ளப்பட்டு, பூங்கா மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்ட இயற்கை உரம் தயாரிப்பு கூடத்திற்கு அனுப்பப்படும்.இதன் மூலம், காய்ந்த இலைகள் குப்பை கிடங்கிற்கு செல்வது தடுக்கப்படுவதுடன், இயற்கை உரமாகவும் உபயோகமாகிறது.