மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பெண் ஒருவர், தனது வாழ்க்கையை கண்ணீர் மல்க கூறியதைக் கேட்ட பிரதமர் மோடி கண்கலங்கினார். மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம், குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் 6,200 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 7 அன்று, மக்கள் மருந்தக நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஜெனரிக் மருந்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம். இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த தீபா ஷா என்ற பெண் பேசியதாவது: 2011 ல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டேன். அப்போது என்னால் பேசக்கூட முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருந்தது.
இதன் பின்னர், பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் மருந்துகளை வாங்கினேன். முன்னர், ரூ.5 ஆயிரத்திற்கு மருந்துகளை வாங்கிய நான், தற்போது இந்த திட்டத்தின் கீழ் மருந்து வாங்க ரூ.1,500 மட்டுமே செலவாகிறது. இதன் மூலம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பணம் மிச்சமாகிறது. இந்த பணம், மற்ற பொருட்களை வாங்க உதவுகிறது.