கேரள மாநிலம் சபரிமலை கோவில் தொடர்பான வழக்குக்குப் பிறகு, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, ஐ.யு.எம்.எல்., எனப்படும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில், ஐ.யு.எம்.எல்., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 'சி.ஏ.ஏ. தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்' என, நேற்று வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசு இதுவரை பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்த சில நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்வதாக, அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால் தெரிவித்தார். இதையடுத்து, 'சபரிமலை தொடர்பான வழக்குகள் விசாரணைக்குப் பின், சி.ஏ.ஏ., தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும்' என, அமர்வு கூறியுள்ளது. 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.