தலைமை செயலகத்தில் கொரொனா அறிகுறி?

       கொரோனா வைரசால் டிஎம்எஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைமை செயலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



   கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதுபோன்று தலைமைச் செயலகத்தில் சில இன்றியமையாத அலுவல் ரீதியான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.


    இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது


     இதை அறிந்த டிஜிபி அலுவலகம், பணிக்கு வரும் போலீசார்களை உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ்காரர்களுக்கு அவர்கள் பணிக்கு வரும்போது உடல் வெப்பநிலை சோதனை நடத்தி அந்த ரிப்போர்ட்டை அனுப்புமாறு டிஜிபி அலுவலகம் கேட்டுள்ளது.


       கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போலீசார் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையிலும் பொதுமக்களை அதிகம் சந்தித்து வரும் நிலையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.