இதில் யார் கோமாளி ???

 


           இந்தக் கரோனா பேரிடர் காலத்திலும் பல அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கப் போவதாக நிர்மலா அக்கா சொல்லிவிட்டார். உடனே பாஜக அரசை ஏதோ கோமாளிகள் போல் நினைத்து இணையத்தில் கேலி செய்து கொண்டிருக்கிறோம்.


           ஆனால் உண்மையில் நாம்தான் கோமாளிகள். இதேபோன்று தான் 90-களிலும் அதற்குப் பின்னர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் பரபரப்பான பல பிரச்சனைகள் ஏற்படும்... ராமர் கோயில், மாட்டு இறைச்சி, பொக்ரான் அணுக்குண்டு சோதனை, கார்கில் யுத்தம் எனச் செய்திகள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். நாடே  அந்தப் பரபரப்பில் விவாதம் செய்து கொண்டிருக்கும்போது சத்தமே இல்லாமல் பின்பக்கத்தில் பல அரசு நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன.


            1999-2004 இடையிலான வாஜ்பாய் ஆட்சியில் அரசுத் துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது அதுதான் Disinvestment Ministry அதற்கான அமைச்சர் அருண்ஷோரி. இந்திய வரலாற்றிலேயே மக்கள் சொத்தை விற்பதற்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்திய முதல் அரசே பாஜக அரசுதான். அப்போது VSNL, Hindustan Zinc, BALCO, IPCL, ITDC hotels மற்றும் Modern Food Industries போன்ற நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. அரசு பங்குதாரராக உள்ள மாருதி கார் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம் போன்றவற்றை வாஜ்பாய் அரசு விற்க முயற்சி செய்யும் போது மற்ற கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன.


              இப்போதும் அதே நிலைதான் நாடே கரோனா பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, கரோனா பரவலைத் தடுப்பதிலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை தொழிலாளர்களைக் காப்பாற்றுவதில் மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு வாய்ப்பை பயன்படுத்தி அரசு நிறுவனங்களை விற்கத் துணிந்து விட்டது.


           பாஜக-ஆர்.எஸ்.எஸ் சங்கி அரசுகள் ஏன் எப்போதும் அரசு நிறுவனங்களை விற்கின்றனர் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில் இவர்களுக்குப் பொருளாதாரம் தெரியாது. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தைச் சீர் குலைத்தது அரசு நடத்தப் பணமில்லாமல் அரசு நிறுவனங்களை விற்பது இவர்களின் வழக்கம்.


           இரண்டாவது காரணம் தான் மிகவும் முக்கியமாக நாம் உற்று நோக்க வேண்டியது. அதைத்தான் பலரும் தவறவிடுகிறோம்.
அரசுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது அதனால் அனைத்து சாதியினரும் அனைத்து நிலையிலும் பணியாற்றும் நிலை நீடிக்கிறது. அரசு நிறுவனங்கள் தனியாரிடம் செல்லும்போது அங்கு இட ஒதுக்கீடு காணாமல் போகும். மீண்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததுபோல் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் சாமானிய மக்களும் மூளை உழைப்பைச் செலுத்த வேண்டிய மேலாளர் போன்ற வேலைகளில் பார்ப்பனர்கள் பணியமர்த்தப்படுவர். இதற்கு உதாரணமாக தற்போது உள்ள இந்திய கார்ப்பரேட் தனியார்த் துறைகளை எடுத்து அலசி பார்த்தாலே புரிந்து விடும்.


          இதற்குத்தான் பாஜக-ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் எப்போதும் தனியார்மயம் தாராளமயம் போன்ற பொருளாதார முடிவுகளை மிக வேகமாகச் செய்யத் துடிக்கின்றது. இதன் மூலம் சங்கிகள் விரும்பும் சனாதன-மனுதர்ம படிநிலை கொண்ட பொருளாதாரத்தை முதலாளித்துவத்திற்கு உள்ளேயே செய்துவிட முடியும்.


          பாஜகவின் ஒவ்வொரு செயலையும் உண்மையாகப் புரிந்துகொள்ள நமக்கு ஈரோட்டுக் கண்ணாடி அவசியம் என்பது காலத்தின் கட்டாயம்.