பல்லடம் அருகே சங்கோதிபாளையத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றம்,பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை ஆகியன இணைந்து மரம் நடும் விழா சங்கோதிபாளையம் கிராமத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் பேசியது. பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் மரங்கள் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மியாவாக்கி முறையில் மரங்கள் வளர்க்கலாம்.மரங்களை அதிகம் வளர்ப்பதால், பறவைகள் அவற்றை தேடி வருகின்றன. பறவைகள் அதிகரிப்பதன் காரணமாக பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது. குறிப்பாக தற்போதுள்ள வெட்டிக்கிளி பிரச்னைக்கும் பறவைகளே தீர்வாகும்.மரங்கள் வளர்ப்பதையும் பறவைகளை நேசிப்பதையும் மறந்ததாலேயே இது போன்ற இயற்கைக்கு எதிரான செயல்கள் நடக்கின்றன என்றார். .மரக்கன்று நடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மகிழ் வனத்துக்கு மண் நடைபாதையை வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் அர்ப்பணித்தார்.
மேலும் காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோயில் மற்றும் கொங்கு வேளாளர் திருமண மண்டப அறக்கட்டளை தலைவர் சின்னசாமி தனது 68வது பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகளை நட்டினார். இந்த நிகழ்ச்சியில் வனம் இந்தியா அமைப்பு தலைவர் சுவாதி சின்னசாமி, செயலாளர் ஸ்கை சுந்தரராஜன், இயக்குநர்கள் ஈஸ்வரமூர்த்தி, டிஎம்எஸ்.பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஒன்றிய குழு உறுப்பினர் மங்கையற்கரசி, ஊராட்சி துணை தலைவர் லலிதாம்பிகை, கோவை,திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க பொருளாளர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.